அமெரிக்காவைத் தாக்கிய சாண்டி புயல்

  மெரிக்காவை அச்சுறுத்தி வந்த சாண்டி புயல், இன்று அதிகாலை நியூ ஜெர்சியை தாக்கியது. இதில் மட்டும் இதுவரை பத்து பேர் பலியாகி உள்ளனர். நியூஜெர்சி பகுதியில் கரையை சாண்டி புயல் கடந்துள்ளதால், அங்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சாண்டி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, நியு ஜெர்சி மாகாணத்தில் வசித்து வரும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு மேல் யாரும் அவரவர் இருப்பிடத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றும், கரையை புயல் கடக்கும் சமயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கும் என்பதால், மீட்புப் பணியில் ஈடுபடுவது சிரமம் என்றும் நியூஜெர்சி கவர்னர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நியூயார்க் உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து மற்றும் மின்சார வசதிகள் அடியோடு ஸ்தம்பித்துள்ளன.   மேலும் இந்த புயல்  நியூயார்க் முதல் வாஷிங்டன் வரையிலான முக்கிய நகரங்களை தாக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த மாகாணங்களில்,  5 கோடி மக்கள் புயலால் பாதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் சில கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
ரயில்வே சுரங்கப் பாதைக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. வர்த்தக மைய தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக சாண்டி புயலால் பங்குச்சந்தைகள் மூடப்பட்டுள்ளன. பல மாகாணங்களில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  சாண்டி புயல் காரணமாக அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.