விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலைவாழ் பகுதி மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட அரசு உண்டு உறைவிடப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி கண்டபோதிலும், போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் உள்ளது இன்னாடு கிராமம். இக்கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏழை பழங்குடி மாணவ, மாணவியரின் கல்வித்தரத்தை மேம்படுத்த இங்கு உண்டி உறைவிடப் பள்ளி தொடங்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக 10 வகுப்பில் 100 சதவீதம் தேர்வு கண்ட பள்ளி இது. கடந்த ஆண்டுகூட கணிதம், அறிவியல் பாடத்தில் 3 மாணவ, மாணவியர் 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இத்தகைய சிறப்புகளை பெற்றுள்ள இப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை நடத்த ஆசிரியர்களே இல்லை என வேதனைக்குரல் எழுப்புகின்றனர் இப்பள்ளி மாணவர்கள்.
ஆசிரியர் பற்றாக்குறை மட்டுமல்ல.அடிப்படை வசதிகளுக்கும் இந்த பள்ளியில் பற்றாக்குறை தான். மேல்நிலை நீர்த்தொட்டி இருந்தும் அதில் தண்ணீர் வருவதே இல்லை என புகார் கூறுகின்றனர் பெற்றோர்கள்.
போதிய வசதிகள் இல்லாமலேயே படிப்பில் மிளிரும் இந்த பள்ளி மாணவ, மாணவியர், தங்களுக்கு தேவையான ஆசிரியர்களை நியமித்தால் மாநில அளவில் சாதனை நிகழ்த்துவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.