57 ஏக்கர்... 16 ஆயிரம் மரங்கள்...


www.thagavalthalam.com Pasumai Nayagan     சளைக்காமல் பணி ஆற்றிய விவசாயத் தொழிலாளர்கள் பலரும், வெவ்வேறு வேலைகளின் பக்கம் ஒதுங்கி வருவதால், விவசாயம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு 100 நாள் வேலைத்திட்டம் வேறு, தொழிலாளர்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, அதளபாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது, நிலத்தடி நீர். இவ்வளவையும் தாண்டி விவசாயத்தில் ஜெயிக்க வேண்டும் என்பவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பது 'மரம் வளர்ப்பு’தான்! அந்த நம்பிக்கையில், பழ மரங்கள், தடி மரங்கள் என வளர்த்து, கலக்கலாக வருமானம் பார்த்து வருகிறார், புதுச்சேரியைச் சேர்ந்த சுந்தரம்.
விழுப்புரம்-செஞ்சி சாலையில் பதினான்காவது கிலோ மீட்டரில் இருக்கும் கஞ்சனூர் கிராமத்திலிருந்து வலதுபக்கமாகப் பிரிந்து செல்லும் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது, தென்பேர் கிராமம். இங்கேதான் இருக்கிறது, சுந்தரத்தின் சோலைக் காடு. மலைச்சாரல் மழை போல தூறிக் கொண்டிருந்த ஒரு காலை நேரத்தில் அந்தச் சோலைக்குள் நுழைந்தோம். குடை பிடித்துக்கொண்டே மரங்களைச் சுற்றிக் காட்டினார், சுந்தரம்.

      ''சொந்த ஊர் பாண்டிசேரி பக்கத்துல இருக்குற தவளக்குப்பம். அப்பா பாண்டிச்சேரி முதல்வருக்கு பி.ஏ.வா இருந்தார். சின்னக் குழந்தையில இருந்தே விவசாயம் பிடிக்கும். காலேஜ் முடிச்சுட்டு சொந்த ஊர்ல இருந்த 30 ஏக்கர்ல விவசாயம் பார்த்துக்கிட்டே, தனியார் கம்பெனில வேலை செஞ்சுட்டு இருந்தேன். 92-ம் வருஷம் அப்பா 'ரிட்டையர்டு’ ஆன பிறகு, அவரும் விவசாயத்துக்கு வந்து, நெல், கடலை, தென்னை, மரவள்ளினு சாகுபடி செஞ்சார். எங்க ஊர்ல, வேலை ஆட்கள் பிரச்னையால சரியா விவசாயம் பார்க்க முடியலை. அதனால, 18 ஏக்கர் நிலத்தை வித்துட்டோம். அதுக்கப்பறம், நான் வேலையை உதறிட்டு, வேலையாள் பிரச்னை இல்லாத இடமா தேடி அலைய ஆரம்பிச்சு... இந்த ஊர்ல
33 ஏக்கர் நிலம் வாங்கி, கடலை, காராமணி, மரவள்ளினு சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்.

     இங்கயும் கொஞ்ச நாள்லயே, தண்ணி பிரச்னை வந்துடுச்சு. அந்த சமயத்துல, பெரியகுளம், தோட்டக்கலைக் கல்லூரியில முதல்வரா இருந்த, சம்பந்தமூர்த்திகிட்ட பேசுனப்போ... 'நெல்லி, சப்போட்டா, மா மாதிரியான பழ மரங்களை வெச்சா, வேலை ஆட்களோட தேவையும் குறையும். குறைஞ்ச தண்ணீரை வெச்சும் சமாளிச்சுடலாம்’னு சொன்னார். அதுக்குப் பிறகு, 12 ஏக்கர்ல நெல்லி, 6 ஏக்கர்ல சப்போட்டா, வேலி ஓரத்துல 1,500 தேக்குனு நடவு செஞ்சுட்டு, மீதி நிலத்துல வழக்கமான சாகுபடி செஞ்சுட்டுருந்தேன். ஓரளவுக்கு வேலையாட்கள் தேவையும், தண்ணீர் தட்டுப்பாடும் கட்டுக்குள் வந்துச்சு. நாலு வருஷத்துல நெல்லியும், அஞ்சு வருஷத்துல சப்போட்டாவும் காய்க்க ஆரம்பிச்ச பிறகு, மீதம் இருந்த நிலத்துல எல்லாம், மா, எலுமிச்சை, தென்னைனு நட்டுட்டேன்'' என்று முன்னுரை கொடுத்த சுந்தரம் தொடர்ந்தார்.


         ''பழ மரங்கள் வருமானம் கொடுக்கறதைப் பாத்ததும், 'இந்த மண்ணுல மர வகைகள் நல்லா வளரும்’னு எனக்குப்பட்டது. என்ன மரங்களை வைக்கலாம்னு தேடிகிட்டிருந்தப்போதான், 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அதுல பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்கள், என்னை ஈர்த்துச்சு. அவரோட பயிற்சியிலயும் கலந்துகிட்டேன். மர சாகுபடி செய்யுற பண்ணைகள் பலதுக்கும் போய், அந்த விவசாயிகளோட அனுபவங்கள உள் வாங்கிக்கிட்டேன். கோயம்புத்தூர், வன மரபியல் ஆராய்ச்சி நிறுவன பயிற்சியில மர வகைகள், பலன் கொடுக்குற காலம், சந்தை எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன்.

      அதுக்கப்பறம்தான், பழ மரங்களுக்கு இடையில குமிழ், மலைவேம்பு மரங்களை நட்டேன். சில இடங்கள்ல அடியில பாறை இருந்ததால இந்த மரங்கள் சரியா வரல. அதனால, வேங்கை, மகோகனி, சிகப்பு சந்தனம், ரோஸ்வுட், பூவரசு, காட்டுவாகை, சிலவாகை, இலவம்பஞ்சு மாதிரியான மரங்களை நட்டிருக்கேன். எல்லா மரங்களுக்கும் மேட்டுப்பாத்தி அமைச்சு, சுத்திக் கிடக்குற இலைதழைகளை மரத்துக்கிட்ட தள்ளி விட்டுடுவேன். அந்த இலைகள் மட்கி, நிறைய மண்புழு உருவாகிட்டதால... இப்ப உழவே ஓட்டுறதில்லை. எல்லாத்தையும் மண்புழுக்களே பாத்துக்குது. எல்லாமே பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் மகத்துவம்தான்!


57 ஏக்கர்... 16 ஆயிரம் மரங்கள்!

      கொஞ்சம் கொஞ்சமா பக்கத்துல கிடைச்ச நிலங்களை வாங்கினதுல இப்போ மொத்தம் 57 ஏக்கர் இருக்கு. 15 ஏக்கர்ல 900 மா, 12 ஏக்கர்ல 2 ஆயிரம் நெல்லி, 12 ஏக்கர்ல 1,300 சப்போட்டா, 6 ஏக்கர்ல 700 தென்னை, 2 ஏக்கர்ல 400 எலுமிச்சை; 200 சாத்துக்குடி, 4 ஏக்கர்ல 450 கொய்யா, 6 ஏக்கர்ல பல வகையான தடி மரங்கள்னு வெச்சுருக்கேன். பழமரங்களுக்கு இடையிலயும், தனியாகவும் 1,900 தேக்கு மரங்கள் இருக்கு. இதுல 1,500 மரங்கள் வேலிப்பயிர். இதுக்கு 9 வயசாகுது. ஊடுபயிரா 1,100 மகோகனி, 400 மலைவேம்பு, 3 ஆயிரம் வேங்கை, 700 குமிழ், 150 தீக்குச்சி, 150 பூவரசு, 60 காட்டுவாகை, 250 இலவம், 600 சிகப்பு சந்தனம், 300 ரோஸ்வுட், 150 சிலவாகை மரங்கள்னு கிட்டத்தட்ட 16 ஆயிரம் மரங்கள் இருக்குது. இதுபோக, 1,200 செடிமுருங்கை, 500 அகத்தியும் இருக்கு'' என்ற சுந்தரம், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.

  செலவை ஈடுசெய்யும் பழ மரங்கள்!

      ''இப்போதைக்கு நெல்லி, சப்போட்டா, மா மட்டும்தான் காய்ப்பில் இருக்குது. நெல்லி மூலமா வருஷத்துக்கு 5 லட்சம் ரூபாய்; மாங்காய் மூலமா வருஷத்துக்கு 2 லட்சம் ரூபாய்; சப்போட்டா மூலமா வருஷத்துக்கு 3 லட்சம் ரூபாய்னு வருஷத்துக்கு 10 லட்ச ரூபாய் கிடைக்குது. இந்த வருமானம்... நிர்வாகச் செலவுக்கு சரியாயிடுது. இன்னும் மூணு, நாலு வருஷத்துல எல்லா பழ மரங்களும் காய்க்க ஆரம்பிச்சு... எலுமிச்சை, சாத்துக்குடி, கொய்யா, இளநீர் மூலமாவும் வருமானம் வர ஆரம்பிக்கும். அப்போ, எல்லா செலவும் போக, பழங்கள் மூலமா ஒரு ஏக்கர்ல இருந்து மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். தடிமரங்களைப் பொறுத்தவரை, எல்லா ரகங்கள்லயும் சேர்த்து, மொத்தம் 7 ஆயிரத்து 260 மரங்கள் இருக்கு. இது ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விலைக்குப் போகும். 10 வருஷம் கழிச்சு, கொஞ்ச மரங்களையும் 20 வருஷம் கழிச்சு கொஞ்ச மரங்களையும் விக்கிறப்போ கோடிக்கணக்குல வருமானம் வரும்னு எதிர்பாக்குறேன்'' என்று மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார், சுந்தரம்.

தொடர்புக்கு, சுந்தரம், 
செல்போன்: 84891-91774.

 பழ மரங்களுக்கு இடையில் பயன்தரும் மரங்கள்!

மர வகைகளை சாகுபடி செய்வது பற்றி, சுந்தரம் சொல்லும் தொழில்நுட்பங்கள்-

      ''மரக்கன்றுகளை நடவு செய்யும் நிலத்தில் களை இல்லாத அளவுக்கு உழவு செய்து கொள்ள வேண்டும். மேட்டுப்பகுதி நிலத்தில் ஆடி மாதத்திலும், பள்ளமான பகுதிகளில், தை மாதத்திலும் நடவு செய்ய வேண்டும்.
18 அடிக்கு 18 அடி இடைவெளியில் நெல்லி; 30 அடிக்கு 30 அடி இடைவெளியில் மா; 22 அடிக்கு 22 அடி இடைவெளியில் சப்போட்டா; 14 அடிக்கு 14 அடி இடைவெளியில் கொய்யா; 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி; 22 அடிக்கு 22 அடி இடைவெளியில், தென்னை என ஒவ்வொரு பயிருக்கும் இடைவெளி வித்தியாசப்படும்.

     இரண்டரை அடி சதுரம், இரண்டரை அடி ஆழத்துக்குக் குழி எடுத்து ஒரு மாதம் ஆறப்போட்டு... அதில், ஒரு கூடை எரு இட்டு செடிகளை நடவு செய்ய வேண்டும். இரண்டு பழ மர வரிசைகளுக்கு இடையில், தேக்கு, மகோகனி, சிகப்பு சந்தனம், மலைவேம்பு ஆகியவற்றை 8 அடி இடைவெளியிலும்; வேங்கை, பெருமரம், ரோஸ்வுட் ஆகியவற்றை 10 அடி இடைவெளியிலும்; காட்டுவாகை, பூவரசு, இலவு ஆகியவற்றை 15 அடி இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.

      இந்த மரங்களுக்கு இடையில் இரண்டு ஆண்டுகள் வரை பயறு வகைகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். இதன் மூலம் மரத்துக்குத் தேவையான தழைச்சத்துகள் கிடைப்பதோடு, வருமானமும் கிடைக்கும். பழ மரங்களுக்கு கவாத்து தேவையில்லை. தடி மரவகைகளை
10 ஆண்டுகள் வரை கவாத்து செய்ய வேண்டும். இதை மட்டும் செய்து வந்தாலே... உங்கள் நிலம் 'காடு’ போல மாறி, பறவைகள், விலங்குகள் எனத் தோட்டம் முழுக்க உயிர்ச் சூழல் பண்ணையாகி விடும்.''

புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலை!

Pasumai4u www.thagavalthalam.com

உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும்.

வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது. எனவே, குழந்தைகள் வளர்ச்சி தடையின்றி இருக்க நிலக்கடலை நல்லது.
சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில்தான் இருக்கிறது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது.

மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன. இதனால்தானோ என்னவோ எளிமையாக வாழ்ந்த காந்திஜி தேவையான அளவு உடலுக்கும், மனதிற்கும் சக்திபெற வேர்கடலையும் ஆட்டுப்பாலும் சாப்பிட்டு வந்தார்.

எல்லாவிதமான இரத்தப்போக்குகளையும் இது தடுக்கும். பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வேர்கடலையாகும்.

பெருந்தீனிக்காரர்களும், உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சீனி சோக்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.

வயிற்றுப்போக்கு உடனே கட்டுப்படவும், பற்கள் பலம் பெறவும் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது உடல் அழகும், இதயப் பாதுகாப்பும்.வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும், இவை வராமல் முன்கூட்டியே தடுப்பதுடன், பளபளப்பான தோலையும் ஏற்படுத்தித் தருகிறது.

எந்த வயதுக்காரரும் தினமும் அதிகபட்சம் 50 கிராம் வரை சாப்பிட்டால், செயலாற்றல் மிக்க மருந்தாக வேர்க்கடலை செயல்படும்.

School பள்ளிகள்

விழுப்புரம்,சென்னை,வேலூர்,நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் ஒரு ஆசியர் கூட இல்லாமல் 16 அரசு பள்ளிகள்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.                                


   கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.
கல்வியின் வீரியம், கல்வியின் சிறப்பு, கல்வியின் பெருமை என கல்வியின் மகத்துவத்தை உணர்ந்த நாம் அறிவுக் கவிஞன் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தை இந்த பொன்னான வரிகளில் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது.
பொன், பொருள் அழியக் கூடும். ஆனால் கல்வி என்னும் செல்வம் காலத்தால் சாகாவரம் பெற்றவை என்பதற்கு மாற்று கருத்து கிடையாது. ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் கல்வியில் சாலச்சிறந்தவர் ஆக வேண்டும் என்பதே அனைவரின் கனவு,ஆசை, லட்சியமாக உள்ளது.
கல்வி  பலருக்கு உலகத்தை காட்டியுள்ளது. கல்வி பலரின் இருண்ட வாழ்கைக்கு கலங்கரை விளக்கமாய் உள்ளது. கல்வி எனும் சோலையில் கால் பதித்து தான் பெற்ற கல்வியால் தன் வாழ்க்கையில் வெற்றிக்கொடி கட்டி இவ்வுலகத்தால் அறியப்பெற்ற, போற்றப்பற்றவர்கள் எண்ணிக்கை அதிகமே...
ஒரு மனிதன் கல்வி கற்பதன் மூலம் தனி மனித முன்னேற்றத்திற்கு மட்டும் இன்றி அவன் வாழும் சமூகமும் அவன் பெற்ற கல்வியால் நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்னேற்றம் அடைகிறது என்பது நான் அனைவரும் அறிந்ததே...
சாகாவரம் பெற்ற முத்தான கல்வியை முத்து முத்தாக மாணவ, மாணவிகளுக்கு தெளிந்த நீரோடையாக வழங்குவது ஒரு அரசின், ஒவ்வொரு ஆசிரியரின் பொறுப்பு.
தமிழகத்தில் மட்டும் ஆரம்ப பள்ளி, நடுநிலை பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர் நிலை பள்ளி என மொத்தம் 53722-க்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் இருப்பதாக புள்ளிவிபரம் காட்டுகிறது.
பொதுவாக தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கும் தரமான கல்வியை புகுட்டுவது அரசின் கடமை. இன்றைய காலகட்டத்தில் அரசு பள்ளிகளில் கல்வி கடமையாக எடுத்து கற்பிக்கிறார்களா? அல்லது கடமைக்காக கற்ப்பிக்கப்படுகிறதா? என்ற கேள்வி நம் மனதில் தோன்றக் காரணம் ஆர்.எம்.எஸ்.ஏ என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்த அதிர்ச்சி  தகவல் தான்.
ஆம், “ஒரு ஆசிரியர் கூட இல்லாமல் தமிழகத்தில் 16 அரசு பள்ளிகள் செயல்படுவதாக” கணக்கெடுப்பில் கூறியுள்ளார்கள். இதன்படி விழுப்புரம்,சென்னை,வேலூர்,நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் ஒரு ஆசியர் கூட இல்லாமல் 16 அரசு பள்ளிகள் இயங்கி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2,253 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 195 பள்ளிகள் ஒரு ஆசிரியரை கொண்டு இயங்குகின்றன. அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 159 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 134 பள்ளிகளிலும், வேலூர் மாவட்டத்தில் 127 பள்ளிகளிலும் ஒரே ஒரு ஆசிரியர் இருக்கின்றனர்.
இது தவிர 16,421 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருக்கின்றனர். மாநிலம் முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறையால் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் உட்பட சுமார் 84 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக  ஆர்.எம்.எஸ்.ஏ என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பு நம் மனதில் வேதனையை அதிகரிக்கிறது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம், விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியரே இல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த களையூர் பகுதியில் இயங்கி வரும் ஆரம்பப் பள்ளியில் தான், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பலர் தங்களது தொடக்கக் கல்வியைப் பெற்றுள்ளனர்.
 School பள்ளிகள்
கடந்த 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வ.உ.சி ஆரம்பப்பள்ளி, அரசு நிதி உதவியுடன் செயல்பட்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு அரிய பொக்கிஷமாக திகழ்ந்த இந்தப் பள்ளி தற்போது மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காரணம் 50 மாணவர்கள் வந்துப் போகும் இந்த பள்ளியில் தற்போது பணியாற்றுவது ஒரு தற்காலிக ஆசிரியர் மட்டுமே.
மாவட்ட கல்வி நிர்வாகத்தால் மூன்று மாதங்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் வேறு பள்ளியில் இருந்து வரவழைக்கப்பட்டு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி நிலையற்ற ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வியின் மீதான ஆர்வம் குறைந்து வருவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.  முழுமையான கல்வி கிடைக்காத இந்தப் பள்ளி மாணவர்களுக்கு முறையான சத்துணவும் கிடைக்கவில்லை.
திறந்தவெளியே இவர்களுக்கான சமையற்கூடம், சுற்றுசுவரும் இல்லை,பள்ளிக்கு மேற்கூரையும் இல்லை. இந்த நிலை நீடித்தால் அடுத்த ஆண்டின் முடிவிலும் தமிழகத்திலேயே விழுப்புரம் மாவட்டம் தான் கல்வியில் பின் தங்கிய மாவட்டம் என்ற செய்தியே மீண்டும் வரும் என்பதில் சந்தேகமில்லை.
விரைவில் பள்ளியை அரசு தத்தெடுத்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும், பள்ளிக்கு தரமான வசதிகளுடன் கூடிய கட்டடம் தேவை என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
- ப. தாமரைச் செல்வன்

போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிப்பு


      விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலைவாழ் பகுதி மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட அரசு உண்டு உறைவிடப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி கண்டபோதிலும், போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
     விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் உள்ளது இன்னாடு கிராமம். இக்கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏழை பழங்குடி மாணவ, மாணவியரின் கல்வித்தரத்தை மேம்படுத்த இங்கு உண்டி உறைவிடப் பள்ளி தொடங்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக 10 வகுப்பில் 100 சதவீதம் தேர்வு கண்ட பள்ளி இது. கடந்த ஆண்டுகூட கணிதம், அறிவியல் பாடத்தில் 3 மாணவ, மாணவியர் 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இத்தகைய சிறப்புகளை பெற்றுள்ள இப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை நடத்த ஆசிரியர்களே இல்லை என வேதனைக்குரல் எழுப்புகின்றனர் இப்பள்ளி மாணவர்கள்.
      ஆசிரியர் பற்றாக்குறை மட்டுமல்ல.அடிப்படை வசதிகளுக்கும் இந்த பள்ளியில் பற்றாக்குறை தான். மேல்நிலை நீர்த்தொட்டி இருந்தும் அதில் தண்ணீர் வருவதே இல்லை என புகார் கூறுகின்றனர் பெற்றோர்கள்.
    போதிய வசதிகள் இல்லாமலேயே படிப்பில் மிளிரும் இந்த பள்ளி மாணவ, மாணவியர், தங்களுக்கு தேவையான ஆசிரியர்களை நியமித்தால் மாநில அளவில் சாதனை நிகழ்த்துவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

செஞ்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்

        லங்கை இறுதிப்போரின்போது நிகழ்ந்த இனப்படுகொலையை கண்டித்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
      ராஜா தேசிங்கு, அறிஞர் அண்ணா உள்ளிட்ட ஆட்டோ சங்கங்களை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

விழுப்புரத்தில் மணல் கடத்திய வண்டிகள் பறிமுதல்


      விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்ற 8 மாட்டு வண்டிகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.பிடாகம் பகுதியில் தென் பெண்ணை ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக விழுப்புரம் நகர காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த 8 மாட்டு வண்டிகள் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
                                 -இணைய செய்தியாளர் - s.குருஜி

விழுப்புரத்தில் கடும் பனி பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

         விழுப்புரம் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளகினர்.
விழுப்புரம் நகரில் இன்று காலையில் கடும் பனி மூட்டம் நிலவிது. இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலை 7மணிக்கு பின்பும் பனி பொழிவு குறையாததால், சாலைகளில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாத நிலை இருந்தது. வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, வேலைகளுக்கு செல்பவர்கள், நடைபயற்சி மேற்கொள்பவர்கள் என அனைத்து தரப்பினரும் சிரமத்திற்குள்ளாகினர். விழுப்புரம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதே நிலையே நீடித்தது.

-நாகை மகாகிருஷ்ணன்